وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ {108} سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ {109} كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ {110} إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ {111}
பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூரி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். அல்குர்ஆன் 37:108.லிருந்து 110 வரை
அல்லாஹ்வின் சோதனையும் - இப்றாஹீம் நபியின் தியாகமும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
குறிப்பிட்ட ஓர் குடும்பத்தின் மாபெரும் தியாகத்தை நினைவு கூர்ந்து உருவாக்கப்பட்டதே ஹஜ் எனும் இறுதிக் கடமையாகும் இஸ்லாமிய கட்டிடத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் வலுவான ஐம்பெரும் தூன்களில் ஹஜ் ஓர் தூன் ஆகும்.
இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள், அத்துடன் அல்லாஹ்விடம் நேரடியாக பேசியவர்களுமாவார்கள். இன்று நாம் நிலைக் கொண்டிருக்கிற ஏகத்துவத்தை (ஓரிறைக் கொள்கையை) அன்று அவர்களே பல சோதனைகளுக்கிடையில் நிலை நாட்டினார்கள் அதற்காக அவர்களை அந்நாட்டு மன்னன் நம்ரூது என்பவன் நெருப்புக் குண்டத்தில் வீசி எறிய ஏற்பாடு செய்தான் (இது நீண்ட வரலாறாகும் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக மிக சுருக்கமாகத் தருகிறோம்) ஆனாலும் அல்லாஹ் அவரை அவனிடமிருந்து காப்பாற்றினான்.
தன்னுடைய தந்தை விக்ரகம் செய்யக் கூடியவர்களாகவும், விக்ரக வழிபாடு நடத்தக் கூடியவர்களாகவும் இருந்தார். தான் விக்ரக வழிபாட்டை எதிர்ப்பவராக இருந்ததால் தனது வீட்டிலும் தொந்தரவு, வெளியிலும் தொந்தரவு பல சிரமங்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் உயிரைப் பணயம் வைத்து ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள் தவ்ஹீதை நிலை நாட்டினார்கள், அவர்கள் முதுமை அடையும் வரை அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது அவர்களும் மனிதர் என்ற ரீதியில் குழந்தைக்காக அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) அல்குர்ஆன் 37:100
இப்றாஹீம் நபி(அலை) அவர்களுடைய வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு குழந்தை பேற்றைக் கொடுக்கிறான் ஆனாலும் அக்குழந்தையின் மூலம் அவர்களுக்கு மாபெரும் சோதனையையும், பின்வரக்கூடிய வழித்தோன்றல்களுக்கு மாபெரும் படிப்பினையையும் ஏற்படுத்தினான். அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.37:101.
இப்றாஹீம் நபி (அலை) அவர்களின் தியாகம் :
குழந்தை பிறக்கிறது, குழந்தைப் பிறந்த பின் பச்சிளங்குழந்தையாக இருக்கும் பொழுது தாயையும் பிள்ளையையும் நாடு துறக்கும் படி இறைவனிடமிருந்து கட்டளை வருகிறது அதன் பிறகாரம் நபியவர்கள் தனது மனைவியையும், பச்சிளங்குழந்தையையும் அழைத்துக்கொண்டு வனாந்திரப் பாலைவனத்தில் விட்டு விட்டுத் திரும்புகிறார்கள்.
அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகம் :
அன்னை (ஹாஜரா) அலை அவர்கள் தனது கணவரை நோக்கி இது இறைவனுடைய உத்தரவா ? என்று மட்டும் கேட்டார்கள் அவர்கள் ஆம்! என்றுக் கூறவே வேறெந்த பதிலும் சொல்லாமல் மனித சஞ்சாரமற்ற அந்தப் பாலைவெளியில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு தங்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு இறைவனின் மீது அந்த முழு குடும்பமும் நம்பிக்கை கொண்டிருந்தது, என்பதற்கு அன்னை ஹாஜரா(அலை) அவர்களுடைய இச்செயல்பாடு மாபெரும் உதாரணமாகும்.
எந்தளவுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு புற்பூண்டுகள் அறவே முளைத்திடாத, முளைக்க எவ்வழியுமில்லாத பாறாங்கற்களும், மணல் முட்டுகளுமே சூழ்ந்து கானப்பட்ட இடத்தில் தங்கிக்கொள்ள எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணத்தை அல்லாஹ் வீனாக்க வில்லை.
உலக அதிசய நீரூற்று உதயம் :
தனது பச்சிளங்குழந்தை தண்ணீருக்காக அழுவதைக் கண்டு பெற்ற மனம் பதை பதைத்துக்க இங்குமங்கும் ஓடுகிறார்கள்; அதைத் தவிற அவர்களால் வேறெதுவும் அங்கு செய்ய இயலவில்லை காரணம் அவ்விடத்தின் சூழல் அப்படி இருந்தது. ஆனாலும்; நெஞ்சைப் பதறச்செய்யும் குழந்தையின அழுகுரலைக் கேட்டுக் கொண்டு அக்குழந்தையினருகில் வீற்றிருக்க முடியாதவர்களாய் ஓர் மலைக்கும் அடுத்த மலைக்குமிடையில் மலை உச்சி வரை ஏறி நின்று மனித நடமாட்டம் இருக்கிறதா என்று ஓடுகிறார்கள். (இந்த இரண்டு மலைகளுமே ஸஃபா மர்வா என்றழைக்கப்படுகிறது) உள்ளங்களைப் பார்க்கக்கூடிய ரப்புல் ஆலமீன் அன்னை ஹாஜரா (அலை) அவர்ளுடைய உள்ளம் ஏக இறைவனின் பால் நம்பிக்கைக் கொண்டதை நினைத்து அவர்களுக்கு உதவுவதற்கு முன் வருகிறான் அதன் மூலம் உலகுக்கு தனது வல்லமையை நிலைநாட்டவும் நினைக்கிறான்.
தனது வானவர் மூலம் குழந்தை அழுது கொண்டு கிடந்த காலுக்கடியில் வானவரின் இறக்கையைக் கொண்டு அடிக்கச் செய்கிறான் அவ்விடத்தில் நீரூற்றுப் பொங்கிப் பாய்கிறது அதனைக் கண்ட அன்னையவர்கள் ஓடோடி வந்து அதனருகில் அமர்ந்து உலக இரட்சகனான ஓரிறைவனை துதித்துக் கொண்டு தங்களது இரு கைகளாலும் மணல்களைக் குவித்து அத்தண்ணீரை ஜம் ஜம் ( நில் நில் ) என்றுக் கூறுகிறார்கள்.
தங்களது கரங்களால் மணல்களைக் குவித்து கட்டிய மணல் அனைக்கட்டுக்குள் அத்தண்ணீர் தேங்கி நின்று கொள்கிறது குழந்தையுடைய தாகம் தனிகிறது அன்னை அவர்களுடைய தாகமும் தணிகிறது.
வல்ல இறைவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றான அந்த ஜம் ஜம் நீரூற்று இனறளவும் அவனுடைய வல்லமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
மக்கா உதயம்
மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தில் அன்னையவர்களுடைய தனிமையைப் போக்கவும் அங்கே ஓர் நகரம் உருவாக்கவும் ஓரிறையாகிய உலக இரட்சகன் மாபெரும் திட்டம் தீட்டுகிறான். அன்னையவர்கள் கட்டிய சிறிய மணல் அனைக்கட்டுக்குள் தேங்கிக் கிடந்த தண்ணீருக்கு மேல் பறவைகள் சூழத் தொடங்குகிறது. அங்கிருந்து வெகு தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஜூல்ஹூம் என்ற வம்சத்தினர் ஓரிடத்தில் பறவைகள் வட்டமிடுவதைக் காண்கின்றனர் பாலைவணங்களில் பயணிக்கும் வழிப் போக்கர்கள் அவ்வாறு மேலே ஓரிடத்தில் பறவைகள் வட்டமிட்டால் அதன் கீழ் தண்ணீர் தேங்கி நிற்க்கும் என்பதை அறிந்திருந்தார்கள்; என்பதால் அங்கு வருகை தருகிறார்கள்.
நீரூற்றுக்கருகில் அமர்ந்திருந்த அன்னையவர்களிடம் நாங்கள் இங்கே குடியமர்ந்து கொள்கிறோம் எனக் கேட்கிறார்கள் இத் தண்ணீரைக் கொண்டு கிடைக்கும் வருமானத்தில் என்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று ஒரு சிறிய நிபந்தனையுடன் அன்னையவர்கள் அனுமதிக்கின்றார்கள்;.
வழிப்போக்கர்கள் அங்கு முகாமிடுகிறார்கள் மக்கள் பல்கிப்பெறுகுகின்றனர் மக்கா உதயமாகிறது அந்நகரம் உம்முல் குரா (நாரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெறுகிறது.
இஸ்மாயில் (அலை) அவர்களின் தியாகம் :
இப்றாஹீம் நபியவர்கள் மனைவிப் பிள்ளையைக் கண்டு வருவதற்கு இறைவனிடமிருந்து உத்தரவு வருகிறது, அத்துடன் அவர்களது மகனாரை அறுத்து அல்லாஹ்வுக்குப் பலியிடுவதாக கணவு மூலம் அறிவிக்கப்படுகிறது இப்றாஹீம் நபயிவர்கள் தனது மனைவி பிள்ளைகளைக் காண மக்கா நோக்கி வருகின்றார்கள் தனது மகனை அனுகி அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ''என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். ''என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார். அல்குர்ஆன் 37:102.
எனது அருமைத் தந்தையே தாராளமாக நிறைவேற்றுங்கள் என்றுக் கூறுகிறார்கள் காரணம் அல்லாஹ்வின் மீது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தனது தந்தையின் நபித்துவத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், தந்தை பொய்யுரைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும், இறைவன் நம்மைப் படைத்தான் அவனிடமே நாம் மீள வேண்டியிருக்கிறது அவனுடைய சித்தத்தை நிறைவேற்ற மனித சமுதாயமாகிய நாம் கடமைப் பட்;டுள்ளோம் என்ற நன்னோக்குடன் தன்னை அறுத்து இறைவனுக்குப் பலியாக்கிக் கொள்ளத் தயாராகிறார்கள் தியாகச்செம்மல் இஸ்மாயில் (அலை) அவர்கள்.
ஷைத்தானை கல்லால் அடிப்பது
தியாகச் செம்மல் இப்றாஹீம் (அலை) அவர்கள் அவர்களது அருமை மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிட அழைத்துச் செல்கிறார்கள் அவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில் ஷைத்தான் அவர்களுடைய மனதில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.
முதலில் அன்னையவர்கள் மனதில் பெற்றப் பிள்ளையை எவராவது அறுத்துப் பலியிடுவார்களா ? என்ற ஊசலாட்டத்தை ஏற்படுததினான்.
அதற்கடுத்து இஸ்மாயில் (அலை) அவர்களது மனதில் இது போன்று ஒருக் காரியத்தை அல்லாஹ் விரும்புவதில்லை இது உன் தந்தையின் தனி விருப்பம் என்பது போல் ஏற்படுத்தினான்.
இறுதியாக இப்றாஹீம்(அலை) அவர்களது மனதில் பெற்றப் மகனை அறுக்கலாமா ? இதை அல்லாஹ் விரும்ப மாட்டான் உமது கனவில் அறிவித்தது இறைவனின் செய்தி அல்ல என்றுப் போடுகிறான் ஒரு கணம் திகைத்துப் போனவர்கள் மீண்டும் தங்களை சுதாரித்துக் கொண்டு இவ்வாறு தடுப்பது ஷைத்தானின் வேலையாகும் என்றுக் கூறி அங்கு கிடந்த சிறிய கற்களை எடுத்து அருகில் வீசி விட்டு தொடர்கிறார்கள்.
இவ்வாறு மூவருடைய மனதில் ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியதாலும் அதில் அவர்கள் வெற்றிப் பெற்றதாலும் அதை நினைவு கூறும் விதமாகவே அங்கே மூன்று இடங்களில் கல் எறியப் படுகிறது.( மாறாக ஷைத்தான் அங்கு வீற்றிருக்கிறான் எனும் நோக்கில் அல்ல)
குர்பானி அறிமுகமாகிறது.
நீண்ட காலங்களுக்குப் பிறகு தவமிருந்துப் பெற்ற மகனுடைய கால்களையும், கைகளையும் கட்டும்பொழுது (அருமைத் தந்தையே இறுகக் கட்டுங்கள் இல்லைனெ;றால் அறுக்கும் பொழுது முண்டி விடுவேன் நீங்கள் மனம் தளர்ந்து விடுவீர்கள் என்று அறுபடப் போகும் மகன் கூறுகிறார். மனதை திடப்படுத்திக் கொண்டு தனது மகனுடைய கால், கைகளை இறுகக் கட்டி குப்புறக் கிடத்திய பொழுது அல்லாஹ் இப்றாஹீம் நபியை அழைத்து ''இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பரிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். அல்குர்ஆன் 37:102. லிருந்து 107 வரை.
அல்லாஹ் மேற்கானும் சம்பவத்தின் மூலம் நரபலியை தடுத்து, கால்நடைகளை பலியிடுவதை மனித சமுதாயத்தின் மீது கடமையாக்கினான்.
உலகில் நடைபெறக் கூடிய ஒவ்வொரு விஷங்களும் இறைவனின் திட்டமிடுதலின் கீழ் செம்மையாக நடைபெறும் என்பதற்கு அறவே ஆள் அறவமற்ற ஓர் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை பிற்காலத்தில் உலகப் பிரசித்திப் பெற்ற இடமாக உருவாக்கியதன் மூலம் அறிவுள்ள மனித சமுதாயம் குர்ஆனின் கூற்றிலிருந்து உலக இரட்சகனாகிய ஓரிறைவனுடைய வல்லமையையும், பேராற்றலையும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளது.
பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூரி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். அல்குர்ஆன் 37:108.லிருந்து 110 வரை
இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருடைய தியாகம் உலகம் முடியுறும் காலம் வரை நினைவு கூறப்பட வேண்டிவையாகும், அதனாலேயே இன்றளவும் நமது ஐந்து நேரத் தொழுகையிலும் அக்குடும்பத்தாருடைய மறுமை வாழ்வுக்காக அத்தஹயாத்தின் இருப்பில் இறைஞ்சும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குப் பணித்தார்கள்,
ஹஜ் செய்யச் செல்வோர் கவனத்திற்கு
ஹஜ் செய்ய முற்படுவதற்கு முன்பு ஹஜ் ஏன் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கடமையாக்கப்பட்டது ? என்பதை விளங்கிக் கொண்டு முதலில் அந்த தியாகச் செம்மல்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து கொண்டு ஹஜ் செய்பவர்கள் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவும் தங்களையும், தங்களுடைய பொருளாதாரத்தையும் எந்த சூழ்நிலையிலும் இழக்க முன்வர வேண்டும், ஹாஜியார் என்ற பட்டம் பெயருக்குப் பின்னால் வரவேண்டும் என்று நினைக்கக் கூடாது, தியாகி என்றப் பட்டத்தை மறுமையில் அல்லாஹ் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு ஹஜ் செய்ய முற்படுங்கள்.
இஸ்லாமிய ஒவ்வொரு கடமைகளுக்குப் பின்னாலும் உலக மாந்தர்களுக்கு மாபெரும் படிப்பினை இருக்கும் என்பதற்கு ஹஜ் கிரியை ஓர் எடுத்துக் காட்டாகும். மனித சமுதாயத்திடமிருந்து அல்லாஹ் தனக்காக எதிர்பார்ப்பது நேர்த்திக் கடன்களோ, காணிக்கைகளோ அல்ல, மாறாக இறையச்சமும் தியாகமும் மட்டுமே என்பதை இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருடைய இறையச்சமும், தியாகமும் மாபெரும் படிப்பினையாகும்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . . அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்